உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் நிரபராதிக்கு சிறை- சிவகங்கை இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டுகள் தடை

Published On 2022-11-15 10:48 IST   |   Update On 2022-11-15 10:48:00 IST
  • இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 42). இவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 31) என்பவர்தான் தனது குடும்ப பிரச்சினைக்கு காரணம் என பிரித்திவிராஜ் நினைத்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி லாரன்ஸ் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 1-ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து அப்போது உத்தமபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன் இந்த வழக்கில் பிரித்திவிராஜ் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டியன் மகன் ராஜேஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கில் கடந்த 8-ந் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் ராஜேஷ்குமார் நிரபராதி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்ட விரோதமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராஜேஷ்குமார் 29 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.

ராஜேஷ்குமார் சட்ட விரோதமாக சிறையில் இருந்ததற்கு சட்டப்படி இழப்பீடு பெற தகுதியுடையவர். விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் உரிய இழப்பீடு பெற அவர் நீதிமன்றத்தை நாடலாம். இழப்பீட்டு தொகை இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த வழக்கிலும் விசாரணை அதிகாரியாக நியமிக்க கூடாது. ஏற்கனவே விசாரணை செய்து வரும் வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தற்போது சிவகங்கையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News