உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே இளம்பெண் கொலை- நகை பறித்து மர்ம நபர்கள் வெறிச்செயல்

Published On 2023-03-12 11:45 IST   |   Update On 2023-03-12 11:46:00 IST
  • ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
  • ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி நித்யா (27). இவர்களுக்கு தனுஸ்ரீ (7), சுபஸ்ரீ (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

நித்யா நேற்று மதியம் ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கமாக செல்லும் கரைப்பாளையம் பகுதியில் உள்ள ஓடைப்பகுதிக்கு சென்று ஆடுகளை மேய்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால் நித்யா மட்டும் வீட்டிற்கு வரவில்லை. வெகு நேரமாகியும் மனைவி வீடு திரும்பாததால் பதட்டம் அடைந்த அவரது கணவர் விவேகானந்தன், கரைப்பாளையம் ஓடை பகுதிக்கு சென்று மனைவியை தேடினார்.

அங்கு நித்யா கொடூரமான முறையில் கொலையுண்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல், ஓடை கரையில் இருந்து சுமார் 500 அடி தூரத்திற்கு சேற்றில் இழுத்து செல்லப்பட்டு இருந்தது. அவரது கழுத்து, கன்னம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் காணப்பட்டன. மேலும் இடது பக்க காதில் இருந்த தங்க கம்மல் காதில் இருந்து பிய்த்து எடுக்கப்பட்டிருந்தது. நித்யா அணிந்திருந்த மேலாடைகள் கிழிந்து இருந்தது. மனைவி அலங்கோலமாக கிடந்ததை பார்த்து விவேகானந்தன் கதறி அழுதார்.

இது குறித்து விவேகானந்தன் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து நித்யாவின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நித்யா வழக்கமாக கரைப்பாளையம் பகுதியில் உள்ள ஓடைப்பகுதிக்கு ஆடு மேய்க்க வருவதை நோட்டமிட்டு மர்ம நபர்கள், அவரை கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்கள் என்பதும், நித்யா சத்தம் போட்டு காட்டி கொடுத்து விடக் கூடாது என்பதற்காக அவரது வாயை பொத்தி இந்த செயலை செய்து இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது.

துணிகள் அலங்கோலமாக கிடந்ததால், அவரை கற்பழித்து கொன்றார்களா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் முழுமையான தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளின் உருவம் கண்டறிய கரைப்பாளையம் பகுதியில் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சந்தேக நபர்களை பிடித்தும், விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News