உள்ளூர் செய்திகள்

மெரினா கடற்கரையில் சிறுவனுக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு

Published On 2022-08-15 02:19 GMT   |   Update On 2022-08-15 02:19 GMT
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபு சீருடையில் இல்லாமல் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார்.
  • பொதுமக்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை :

சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில் சீருடையில் இல்லாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே அவனது உறவினர்களும், அங்கு நின்றவர்களும் கூச்சல் போட்டனர்.

ஒரு சிலர் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பார்த்து வேகமாக அங்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறுவன் லேசாக கண்ணைத் திறந்தான்.

அப்போது அங்கு நின்ற சிலர், சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயன்றனர். உடனே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினார்.

உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறியரக வாகனம் அங்கு வந்தது. உடனே அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் சைலேந்திரபாபு ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கூறினார்.

அப்போதுதான் பலருக்கு அவர் போலீஸ் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News