உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு நண்பனுடன் சேர்ந்து தாயை அரிவாளால் வெட்டிய மகன்

Published On 2023-07-04 11:07 IST   |   Update On 2023-07-04 11:07:00 IST
  • கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
  • தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் பிச்சை (வயது 47). இவர் தனது மனைவி ஆனந்தி (38) மற்றும் மகன் ஷியாம் என்ற சந்தோசராஜாவுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பிச்சைக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு உருவானது.

இதையடுத்து தம்பதியினர் இருவரும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ஆனந்தியின் மகன் ஷ்யாம் அவரது தந்தை பிச்சையுடன் திருச்சுழியில் வசித்து வருகிறார். கணவரை பிரிந்த மனைவி ஆனந்தி அருப்புக்கோட்டையில் காமராஜர் பகுதியில் தனியாக ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

மகன் ஷியாம் மட்டும் அவ்வப்போது அருப்புக்கோட்டைக்கு சென்று தாயை பார்த்து வருவார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் ஆனந்திக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து ஒரு கட்டத்தில் தாயின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அவரை கண்டித்து அறிவுரை கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு ஷியாம் மற்றும் அவரது நண்பரான துரைப்பாண்டி (18) இருவரும் அருப்புக்கோட்டையில் உள்ள காமராஜர் நகரில் வசித்து வரும் ஆனந்தியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மீண்டும் அவரது நடத்தை தொடர்பாக ஷியாம் கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த ஷியாம் மற்றும் துரைப்பாண்டி இருவரும் சேர்ந்த அரிவாள் மற்றும் கம்பால் ஆனந்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆனந்தியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த அருப்புக்கோட்டை போலீசார் ஷியாம் மற்றும் துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News