மாணவர்கள் சாலையை கடந்து செல்வதால் விபத்து ஏற்படுவதாக புகார்: பள்ளியில் ஆய்வு செய்த எம்எல்ஏ
- பாதுகாப்பில்லாமல் செல்வதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கினர்
- விளையாட்டு மைதானம், கழிவறையை சீரமைத்து தர மாணவர்கள் கோரிக்கை
பொன்னேரி:
சோழவரம் அடுத்த திருநிலை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் உள்ள ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு அதில் உள்ள மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்பு மாணவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் படித்து வருகின்றனர். அவ்வாறு படிக்கச் செல்லும் மாணவர்கள் சாலையைக் கடந்து அரை கிலோ மீட்டர் தூரம் செல்லவேண்டி உள்ளதால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், பாதுகாப்பில்லாமல் செல்வதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும் தயங்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விளையாட்டு மைதானம் மற்றும் கழிவறையை சீரமைத்து தர வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ தெரிவித்தார்.
ஊராட்சித் தலைவர் அம்மு சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், செல்வம் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உடனிருந்தனர்.