உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்ைச சிறை பிடித்து போராட்டம் நடத்திய மாணவ-மாணவிகள்.

திண்டுக்கல் அருகே தாமதமாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மாணவர்கள் போராட்டம்

Published On 2022-11-21 11:01 IST   |   Update On 2022-11-21 11:01:00 IST
  • இன்று காலை கொம்பேறிப்பட்டி நால்ரோடு பிரிவில் 7.30 மணிக்கு வர வேண்டிய பஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
  • இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, கொம்பேறிப்பட்டி வழியாக மம்மானியூர் வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலம் பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1 மாதமாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பஸ் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பஸ் இயக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால் தாமதமாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு விடுவதாக அவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். மேலும் கூலித் தொழிலாளர்களும் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியது இருந்தது. இன்று காலை கொம்பேறிப்பட்டி நால்ரோடு பிரிவில் 7.30 மணிக்கு வர வேண்டிய பஸ் 1 மணி நேரம் தாமதமாக வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பஸ்சை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

பல முறை தாங்கள் கோரிக்கை விடுத்தும் தாமதமாக பஸ் வருவதால் ஆசிரியர்களிடம் திட்டு வாங்குவதாகவும் தெரிவித்து டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமையில் அங்கு வந்தவர்கள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகிகளிடம் எடுத்துக்கூறி உரிய நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News