உள்ளூர் செய்திகள்

10 ரூபாய் நாணயங்களை சேகரித்து ரூ.3½ லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் வாங்கிய மாணவர்

Published On 2022-09-24 08:46 IST   |   Update On 2022-09-24 08:46:00 IST
  • ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது.
  • கடந்த 5 ஆண்டுகளாக அவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்தார்.

பவானி :

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது மகன் சந்தோஷ்குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

இவருக்கு விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக அவர் தன்னுடைய உழைப்பினால் கிடைத்த பணத்தால் மட்டுமே மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என வைராக்கியமாக இருந்தார்.

அப்போது ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே 10 ரூபாய் நாணயங்களாக சேகரித்து வைத்து மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.. இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களின் மதிப்பு நேற்று ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆனது. இதையடுத்து முழு தொகையையும் கொண்டு அதிநவீன மோட்டார்சைக்கிள் வாங்குவதற்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலைய ஷோரூமுக்கு வந்தார்.

இதற்காக அவர் தான் சேகரித்து வைத்திருந்த 7 கிலோ 750 கிராம் எடையிலான 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் 2 கார்களில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர் அவர் அந்த நாணயங்களை கொடுத்து புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.

கல்லூரியில் படித்துக்கொண்டே தனது சொந்த உழைப்பில் அதிநவீன மோட்டார்சைக்கிளை வாங்கிய சந்தோஷ்குமாரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News