உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக அவதூறு வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை- எஸ்.பி. எச்சரிக்கை

Published On 2023-03-06 15:47 IST   |   Update On 2023-03-06 15:47:00 IST
  • அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது.
  • சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்றும் வீடியோக்கள் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் இந்தியில், தனது சமூக வலைதள பக்கமாக டிவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டார்.

அதில் அவர் கூறியதாவது:-

நான் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ் குமார் தாக்கூர் பேசுகிறேன். எங்கள் மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் எப்போதோ, வேறு எந்த மாநிலத்திலோ நடந்த வீடியோக்களை போட்டு வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை போன்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்புடன் நன்றாக உள்ளார்கள். அவதூறு வீடியோக்களை யாரும் பரப்ப கூடாது. அவ்வாறு பரப்புபவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். சமூக வலைதளங்கள் அனைத்தையும் காவல் துறையினர் கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசி உள்ளார்.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து டிவிட்டர் பக்கத்தில் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல ஒரு கருத்தை பரப்பியதாக சுக்லா என்பவர் பரப்பி உள்ளார். அவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News