வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் கிருஷ்ணகிரி எஸ்.பி. எச்சரிக்கை
- பத்திரிகையாளர்கள் அல்லாத மற்ற நபர்கள் பிரஸ் ஒட்ட கூடாது.
- பிரஸ் என கூறி மிரட்டி யாரேனும் பணம் கேட்டாலோ, காவல் துறையில் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்கள் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில சோதனை நடத்தி தற்போது வரையில் 4 போலி நிருபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் அல்லாத மற்ற நபர்கள் யாரேனும் வாகனங்களில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டி சென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல எந்த அலுவலகங்களிலும் பிரஸ் என கூறி மிரட்டி யாரேனும் பணம் கேட்டாலோ, காவல் துறையில் புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது தற்போது வரையில் மகராஜகடை, வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கந்திகுப்பம், மத்திகிரி ஆகிய போலீஸ் நிலையங்களில் கந்து வட்டி தொடர்பாக மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, 20 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கந்துவட்டியால் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் 96779 45569 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார் செய்யலாம்.
பாதிக்கப்பட்ட நபர்களிடம் விவரங்கள் பெறப்பட்டு, வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் கந்து வட்டியால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. எந்தவித அச்சமும் இன்றி புகார் செய்யலாம். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.