உள்ளூர் செய்திகள்

தருமபுரி டவுன் பஸ் நியைத்தில் பஸ் நிற்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

ஆக்கிரமிப்பை அகற்றி தருமபுரி டவுன் பஸ் நிலையத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2023-07-31 08:36 GMT   |   Update On 2023-07-31 08:36 GMT
  • தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

தருமபுரி, 

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட டவுன் பஸ் நிலையத்தை பூ வியாபாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆக்கிரமிப்பால் பஸ்சுக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் வெட்ட வெளியில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தருமபுரி நகராட்சி உட்பட்ட பகுதியில் புறநகர் பஸ் நிலையம், நகர பஸ் நிலையம் என்று தனித்தனியாக இயங்கி வருகிறது. இதில் நகர பஸ்நிலையம் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பரப்பரப்பாக காணப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், காரிமங்கலம், தொப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தருமபுரி நகரப் பகுதிக்கு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூருக்கு பயணம் செல்லும் பயணிகள் என்று பல்வேறு தரப்பினர் டவுன் பஸ்சில் பயணம் செய்து நகர பஸ் நிலையத்தை வந்து அடைகின்றனர்.

பின்னர் டவுன் பஸ் நிலையத்திலிருந்து தருமபுரி அரசு கலைக் கல்லூரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி, மாட்டிலாம் பட்டியில் உள்ள சட்டக் கல்லூரி, செட்டி கரை அரசு பொறியியல் கல்லூரி, பைசுஅள்ளியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி, கடகத்தூர் பகுதியில் உள்ள தொழில் பயிற்சி கல்லூரி, செட்டிகரையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி பள்ளி கல்லூரிக்கு செல்கின்றனர்.

இவ்வாறு இருக்கையில் தருமபுரி மாவட்டத்தில் கிராமம் பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வரும் பூக்களை டவுன் பஸ்நிலையத்தில் வியாபாரிகள் பெற்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதன்காரணமாக பூவியாபாரிகள் டவுன் பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்பதற்காக அமைக்கப்பட்ட பிளாட்பாரம் மற்றும் பஸ் நிறுத்துமிடம் என பகுதிகளை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருவதால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் நிற்பதற்கு கூட இடமின்றி வெட்ட வெளியில் நின்று அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன்காரணமாக மழையோ, வெயிலோ அதிகமாக இருக்கும் காலங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர் கூறும் போது:-

தருமபுரி நகர பஸ் நிலைய ஆக்கிரமிப்பு பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தருமபுரி மாவட்டத்தில் கிராமங்களில் இருந்து வரும் டவுன் பஸ்கள் உள் நுழைவதற்கே இடம் இன்றி ஊர்ந்து செல்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், நகரப் பகுதியை நோக்கி வரும் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து இறங்குவதற்கு வழி இன்றி தவித்து வருகின்றனர்.

மேலும் நகர பஸ்நிலையத்திலிருந்து பள்ளி, கல்லூரி செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருக்கும் போது மாணவ, மாணவிகள் நிற்பதற்கு இடமின்றி தவித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

டவுன் பஸ் நிலையத்ைத ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பூ வியாபாரம் செய்வதற்கு பூ வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும் என்றும் ன சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News