முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம்
- ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் தொடங்கியது.
- 600-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த 27-ம் தேதி முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் தொடங்கியது.
சார் பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஏற்கனவே தங்களது ஆவணங்களை பதிவு செய்த போது, முத்திரைத்தாள் கட்டணம் சம்பந்தமாக போதிய தொகை செலுத்தாத நிலையில், அவர்களது முத்திரைத்தாள் ஆவணங்கள் சார் பதிவாளர் அலுவலகத்திலேயே கிடப்பில் உள்ளன.
அவ்வாறு கிடப்பில் உள்ள ஆவணங்களை, பதிவு செய்தவர்கள் தற்போது பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை சார்பில் முத்திரைத்தாள் தின சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.
அவ்வாறு பத்திரப்பதிவுகள் நடைபெற்று, உரிய முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தாத நிலையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கிடப்பில் உள்ளன.
எனவே தற்பொழுது அரசு அறிவித்துள்ள இந்த சிறப்பு முகாம் வாயிலாக முத்திரைத்தாள் கட்டண குறைபாடுகளை களையும் விதமாக சுமார் 50 சதவீதம் வரை கட்டண குறைப்பு செய்து பொதுமக்கள் பயனடையும் விதமாக ஆவணங்களை பெற்றுக் கொள்ள ஏதுவாக முகாம் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த சிறப்பு முகாம் 2 நாட்கள் நடைபெறும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்களுக்கு மற்றும் பயனாளிகளுக்கு தகவல் சென்றடைய போதிய கால அவகாசம் இல்லை என்ற நிலை கருதி, மேலும் இந்த சிறப்பு முகாமை 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது.
எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக ்கொள்ளுமாறு ஓசூர் சார் பதிவாளர் ரகோத்தமன் கேட்டுக்கொண்டுள்ளார்.