ராமேசுவரம் மீனவர்களை அடித்து விரட்டிய இலங்கை கடற்படையினர்- மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு
- தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது.
- இலங்கை கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர்.
ராமேசுவரம்:
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள கடல் பரப்பில் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்வது, படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியாமல் போவது மட்டுமின்றி, லட்சக்கணக்கில் நஷ்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை தடுக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் வெகுநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இருந்தபோதிலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிலையில் நேற்று எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 524 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் வழக்கம்போல் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களின் 8 விசைப்படகுகளை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த படங்களில் ஏறிய இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.
மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை கடலுக்குள் கொட்டியுள்ளனர். இதையடுத்து அந்த மீனவர்கள் அனைவரையும் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக கூறி கம்பு மற்றும் கற்களால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளான 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் நேற்று இரவு ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டியது குறித்து சக மீனவர்களிடம் தெரிவித்தனர்.
அதனைக்கேட்டு மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் தங்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்பட்டது குறித்து மத்திய மற்றும் மாநில உளவு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.