உள்ளூர் செய்திகள்

பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பழனியில் பாதயாத்திரை பக்தர்களுக்காக சிறப்பு வழிபாடு

Published On 2022-12-21 10:34 IST   |   Update On 2022-12-21 10:34:00 IST
  • தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
  • தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பழனி:

பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.

ஆண்டுதோறும் தைப்பூசதிருவிழாவுக்கான அனுமதி கேட்டும், பாதயாத்திரைவரும் பக்தர்களின் நலனுக்காகவும் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதி, அடிவாரம் வடக்கு கிரிவீதி வீரதுர்க்கையம்மன், கிழக்கு கிரிவீதி அழகுநாச்சியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா அனுமதி கேட்டும், பாதயாத்திரை பக்தர்கள் நலனுக்காகவும் நேற்று முன்தினம் மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து நேற்று வடக்கு கிரிவீதியில் உள்ள வீரதுர்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக அங்கு கலசபூஜை, புண்ணியாக வாஜனம், பாராயணம், கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உபயதாரர்கள் சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், பழனிவேலு, ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி மற்றும் குருக்கள் செய்தனர்.

Tags:    

Similar News