நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலக ரேபிஸ் தினத்தையொட்டி திண்டுக்கல்லில் நாய்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
- உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கமிஷனர் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் முன்னிலையில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
- தெரு நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் என மொத்தம் 25 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
உலக ரேபிஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள், விலங்குகள் நல அமைப்புகள் உட்பட உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், சுகாதார நீர் மற்றும் கால்நடை பராமரிப்பு ஆகியவை ரேபிஸ் கட்டுப்பாடு மற்றும் பொறுப்பான செல்லப்பிராணிகளின் உரிமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள், தெரு நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட கால்நடை ஆஸ்பத்திரியில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலர் செபாஸ்டின் முன்னிலையில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. தெரு நாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் என மொத்தம் 25 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மேலும் செல்லப்பிராணிகளுடன் வந்த பொதுமக்கள் வெறிநாய் தடுப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், முகமது ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.