குன்னூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் சிறப்பு பரிசு
- பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
- குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி:
குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர்நல அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் மணி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
நகரமன்ற உறுப்பினர் விசாலாட்சி தலைமையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி முன்னிலையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.