சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது
- கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சஷ்டி விழா நடைபெறவில்லை
- இன்று விழா தொடங்கியதும் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்றழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருக்கோவில் ஆகும்.
மேலும், ராமனிடம் அவரது மகன்களான லவா மற்றும் குசா என இரண்டு சிறுவர்கள் அம்பு எடுத்து போரிட்டதால் இந்த ஊருக்கு சிறுவாபுரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
சிறப்புமிக்க இந்த கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ரூ.ஒரு கோடியே 25 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேகம் நடைபெற்றது. இம்மாதம் 8-ம் தேதி மண்டலபிஷேக நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கந்த சஷ்டி விழா இன்று துவங்கியது. இன்று காலை கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இதன் பின்னர், உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துர்கா ஸ்டாலின் சகோதரி ஜெயந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், விருகை பிரபாகர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் தேவி தயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்துரு, ஊராட்சி தலைவர் ஜான்சிராணி தேவராஜ், துணை தலைவர் சேகர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பகலவன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் சித்ராதேவி தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் மற்றும் பணியாளர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர்.