உள்ளூர் செய்திகள் (District)

திருப்புவனம் யூனியன் மணல்மேடு கிராமத்தில் நடந்த கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்.எல்.ஏ. உள்ளனர்.

தமிழக மக்கள் பாராட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார்-அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

Published On 2022-12-17 08:09 GMT   |   Update On 2022-12-17 08:09 GMT
  • திருப்புவனம், மானாமதுரையில் யூனியன் அலுவலக கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
  • தமிழக மக்கள் பாராட்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவார் என்று விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மானாமதுரையில் புதிய யூனியன் அலுவலகங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. இரு இடங்களிலும் தனித்தனியாக நடந்த விழாக்களுக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் முன்னிலை வகித்தனர். திருப்புவனம் மற்றும் மானாமதுரையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் கட்டுவதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் பொருளாதார நெருக்கடியை சீர் செய்து அனைத்து துறைகளின் சார்பில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அனைத்து துறைகளின் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகிறார். கிராமப்புற மேம்பாட்டுக்கு தனித்துவம் அளித்து அதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் கிராமப் பகுதிகளில் சாலை, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்காகவும், பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் நவீன வசதிகளுடன் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த கட்டிடங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பெரு நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் வரும் நிதியாண்டில் சாக்கோட்டை, எஸ். புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் புதிய அலுவலகங்கள் கட்டிடத்திற்கான பணிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும், ரூ5. 55 கோடி மதிப்பீட்டில் மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடமும் கட்டப்பட உள்ளன. மாவட்டத்தில் மீதம் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலை பற்றி பேசுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கு அனைத்து தகுதிகளும் உள்ளது. தமிழக மக்கள் பாராட்டும் வகையில் அவர் செயல்படுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இளையான்குடி ஒன்றிய செயலாளர்-முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, நகராட்சி தலைவர்-முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, யூனியன் துணைத் தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News