போலீசாருக்கு மாதம் ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை
- பணிச்சுமையால் மன அழுத்தத்தில் உள்ள போலீசாருக்கு மாதம் ஒருமுறை சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.
- இது தொடர்பாக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
போலீசார் பல காவல் நிலையங்களில் விடுமுறையின்றி இரவு, பகலாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இந்த பணி சுமை அவர்களுக்கு மன அழுத்ததை தருகிறது. இதனால் போலீசாருக்கு மன அழுத்த நோய், சர்க்கரை நோய், காலில் நரம்பு சுருள் நோய் (வெரி கோஸ்)போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருவிழா காலங்கள், அரசு மற்றும் அரசியல் விழாக்களில் போலீசார் நீண்ட நேரம் பணியமர்த்தப்படுவதால் அவர்கள் இந்த வகை நோய்களால் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடும்பங்களை சரிவர கவனிக்க முடியா மலும், உடல் நிலையில் கவனம் செலுத்த முடியா மலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை விடுமுறையானது சில இடங்களில் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. இதை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் போலீசார் வருத்தம் தெரிவித்தனர்.
அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் முதல்-அமைச்சர் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி மாதந் தோறும் காவல் நிலையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் மாதம் ஒரு முறையாவது பணியில் இருக்கும் போலீசாருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று காவலர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.