உள்ளூர் செய்திகள்

பீர் பாட்டிலால் அடித்து கல்லூரி மாணவர் கொலை

Published On 2023-03-06 08:41 GMT   |   Update On 2023-03-06 08:41 GMT
  • தேவகோட்டை அருகே கல்லூரி மாணவர் பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
  • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கூத்தலூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகன் சுதந்திரன் (வயது 20). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி., படித்துவந்தார். சுதந்திரனும் கல்லல் விநாயகநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சூர்யபிரகாஷ் (20) என்பவரும் நண்பர்கள்.

இந்த நிலையில், நேற்று கல்லலில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சூர்யபிரகாஷ் அழைத்ததால், சுதந்திரன் கல்லல் சென்று திருவிழா தேரோட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் விநாயகபுரம் அருகே வந்தபோது மதுபோதையில் நின்றிருந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறு செய்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் பீர்பாட்டிலால் சுதந்திரனையும், சூர்யபிர காசையும் கடுமையாக தாக்கினர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சுதந்திரன், சூர்யபிரகாஷ் ஆகிய இருவரும் மயங்கி விழுந்தனர். இதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதற்கிடையே, திருவிழாவுக்கு சென்று விட்டு அந்த வழியாக வந்த சிலர் 2 வாலிபர்கள் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுபற்றி கல்லல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சுதந்திரன் கவலைக்கிடமாக இருந்ததால் அவரை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சூர்யபிரகாசுக்கு காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது குறித்து கல்லல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொலை நடந்த பகுதிக்கு இன்று சென்று அங்கு உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி உள்ள மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News