கலைத்திருவிழாவில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுடன் ஆசிரியர்கள்.
காஞ்சிரங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2-ம் பரிசு
- மாநில அளவிலான கலைத்திருவிழாவில் காஞ்சிரங்கால் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு 2-ம் பரிசு வழங்கப்பட்டது.
- இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று 2-ம் பரிசை வென்று திரும்பினர்.
அவர்களுக்கு கிராம பொதுமக்கள் சார்பிலும், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திரு விழா நடத்தப்பட்டு, இதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடந்த போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கையை அடுத் துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்து மாநில அளவில் 2-ம் இடத்தை பிடித்தனர். அதற்கான பரிசளிப்பு விழா சென்னையில் நேரு விளை யாட்டு அரங்கில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவிகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, ஆசிரியர்கள், கிராம பொது மக்கள், வரவேற்றனர்.
சென்னையில் நடந்த கலைத்திருவிழாவில் 2-ம் பரிசு பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளை காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.