பாலியல் புகார்: தலைமறைவான மத போதகர் ஜான் ஜெபராஜ் வெளியிட்ட ஆடியோ
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
- ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.
இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.
அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.
எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.
நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.