குன்னூரில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்
- கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது.
- கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது
ஊட்டி,
குன்னூர் 11-வது வார்ட்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இதனால் அந்த பகுதியே சாக்கடை நிரம்பி நடக்க முடியாமலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமும் அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சில பணிகள் நடந்தன. ஆனால் அப்போது கூட மக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.