உள்ளூர் செய்திகள்

மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா?: அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்

Published On 2022-12-24 02:29 GMT   |   Update On 2022-12-24 02:29 GMT
  • தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும்.
  • இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.

கோவை

கோவை கொடிசியா மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இதற்காக மேடை அமைக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் வரை நடைபெறும் 3 அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில் நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்துவிட்டு பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பின்னர் கொடிசியா மைதானத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது அமைச்சரிடம் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க தேதி நீட்டிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து கூறியதாவது:-

தமிழகத்தில் மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைக்க முகாம் நடந்து வருகிறது. இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 67 லட்சம் பேர் இணைக்க வேண்டும். அதில் இதுவரை 50 சதவீதத்துக்கும் மேல் இணைத்து உள்ளனர்.

வருகிற 31-ந் தேதி முடிந்த பின்னர் எத்தனை பேர் இணைத்து உள்ளனர் என்ற பட்டியலை கணக்கில் எடுத்துவிட்டு தேதியை நீட்டிப்பது தொடர்பாக முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும்.

மின்இணைப்பில் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சிலர் அரசியலுக்காக சில தவறான கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். எனவே அந்த தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News