உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்வதை படத்தில் காணலாம்.

பஸ்சின் படிக்கட்டில் சாகசத்தில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள்

Published On 2023-09-16 15:20 IST   |   Update On 2023-09-16 15:20:00 IST
  • மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
  • டிரைவர்கள் கண்டித்தால் அவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அரூர்,  

தருமபுரி மாவட்டம் அதிகாரப்பட்டி பகுதியில் அரசு பஸ் எண் 14 -ல் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஓடும் பஸ் ஜன்னல் கம்பியை பிடித்துக்கொண்டு, உயிருக்கு ஆபத்தினை விளைவிக்கும் வகையில் பள்ளி மாணவர் ஒருவர் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பஸ்சின் மீது ஏறுவதும், இறங்குவதும் , தலையை கையால் சீவி ஸ்டைல் செய்யும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இதைக் காணும் பஸ் பயணிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பதை பதைத்து போகின்றனர். மேலும் இதே போன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தனியார் பஸ்சில் பள்ளி மாணவர்கள் பஸ் கம்பிகளை பிடித்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மற்றொரு வீடியோ காட்சியும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பள்ளி, மாணவர்கள் இது போன்று ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்வது என்பது தொடர் கதையாகவே உள்ளது. சாகசம் என்ற பெயரில் தங்கள் உயிருக்கு மட்டுமல்லாமல், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் மாணவர்கள் பயணம் மேற்கொள்வது பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை அரசுப் பஸ் கண்டக்டர், டிரைவர்கள் கண்டித்தால் அவர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

போக்குவரத்து காவல்துறையினர் பள்ளி விடும் நேரங்களில் இதுபோன்று படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பினாலும், தொடர்ந்து மாணவர்கள் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் பள்ளி, மாணவர்களை கண்காணித்து அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இனியும் இதுபோன்று தவறான பயணங்களை மேற்கொள்ளாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News