சேலத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
- சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலையில் உள்ள ஸ்ரீ சேலத்து மாரியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீ எல்லம்மா தேவி கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவையொட்டி மகாகும்பாபிஷேக பிரதிஷ்டை விழா கடந்த 23ம் தேதி துவங்கியது தொடர்ந்து கோயிலில் தினம்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய சாலைகளின் வழியாக பக்தர்கள் ஆடி, பாடி ஊர்வலமாக சென்று தேவராஜன் ஏரியில் புனித நீராடி, தீர்த்த குடங்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
இதையடுத்து சேலத்து மாரியம்மன் ஆலயத்தில் மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலை விநாயகர் வழிபாடு நடைபெற்றது.
தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரஹ யாகபூஜை நடைபெற்றது. மதியம் அஷ்டபந்தனம் நடைபெற்றது. இரவு மகா மாரியம்மன் விமான கலசம் ஸ்தாபிதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து மாரியம்மன் சிலை பீடத்தில் நிலை நிறுத்தல், எந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும், இரவு 3-ம் கால யாக பூஜையும் நடந்தது.
நேற்று காலை யாகசாலைபூஜையும், தொடர்ந்து யாத்ரா தானம் நடந்தது. இதையடுத்து புனித தீர்த்த கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மாரியம்மன் எல்லம்மா தேவி ஆகிய தெய்வங்களின் கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் குழுவினர் செய்திருந்திருந்தனர்.