தேன் கூட்டை அகற்றிய தீயணைப்பு வீரர்கள் .
ஓமலூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் 9 பேர் காயம்
- ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது.
- அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சக்கரைசெட்டிபட்டி ஊராட்சியில் மந்திவளவு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு பொதுவான இடத்தில் பெரிய புளிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் மலைத்தேன் கூடு கட்டியுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் வாழ்ந்து வந்த இந்தநிலையில், அப்பகுதியை சேர்ந்த யாரோ தேன் கூட்டில் கற்களை வீசியுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தேனீக்கள் ஊருக்குள் வேகமாக பறந்து ஓடியது. மேலும், வழியில் வந்தவர்களை எல்லாம் கடித்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த காவேரி, அவரது மனைவி கலா, மகள் சபரிதா, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், மோலையன், மஞ்சுளா, செந்தில், பெரியசாமி, பெருமாள், மவுலி உள்பட 9-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதில், மஞ்சுளா, மோலையன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், ஊருக்குள் பரவிய தேனீக்கள் அங்குள்ள நாய்கள், ஆடு, மாடுகள் ஆகியவற்றையும் கடித்ததில், அவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு மூலிகை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி யடைந்த கிராம மக்கள், ஊராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்களை அழைத்து சென்று, புளியம் மரத்தில் இருந்த தேன் கூடு, தண்ணீரை பீய்ச்சியடித்து அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.