உள்ளூர் செய்திகள்

கலைஞர்களுக்கு விருதுகளை கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் வழங்கிய காட்சி.

சேலம் மாவட்ட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

Published On 2023-03-11 15:22 IST   |   Update On 2023-03-11 15:22:00 IST
  • கலெக்டர் கார்மேகம் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களால், வயது மற்றும் கலைப்புலமைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டது.
  • நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார், இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்:

சேலம் கலை பண்பாட்டுத்துறையின் சார்பாக, 2021-2022-ம் ஆண்டிற்கான சேலம் மாவட்டக் கலைமன்றம் சார்பான மாவட்ட விருதுகள் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையிலான தேர்வுக்குழு உறுப்பினர்களால், வயது மற்றும் கலைப்புலமைக்கேற்ப தெரிவு செய்யப்பட்டது.

அவர்களுக்கு கலை முதுமணி, கலை நன்மணி, கலை சுடர்மணி, கலை வளர்மணி மற்றும் கலை இளமணி ஆகிய விருதுகளை கலை பண்பாட்டு துறை இயக்குநர் காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

அதன்படி கலை முதுமணி விருதுகள், நாடக நடிகர் வி.கே.ராஜசிகாமணி, சொற்பொழிவாளர் சிட்டிபாபு, குரலிசை கலைஞர் டாக்டர் கே.விஜயலட்சுமி ஆகியோருக்கும் ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.

கலை நன்மணி விருதுகள், தெருக்கூத்து கலைஞர் மதியழகன், நாதஸ்வர கலைஞர் மாரியப்பன், சிலம்பாட்ட கலைஞர் ரத்தினக்குமார் ஆகியோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.

புல்லாங்குழல் கலைஞர் வி.எஸ்.தியாகராஜன், கரகாட்ட கலைஞர் பாலு, நகரி மேள கலைஞர் பூபதி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை சுடர்மணி விருதுகள் வழங்கப்பட்டது.

தப்பாட்ட கலைஞர் கோவிந்த ராஜ், பம்பை, உடுக்கை கலைஞர் பிரகாஷ், வீணை கலைஞர் ராஜவிக்னேஷ் பெருமாள் ஆகியோருக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை வளர்மணி விருதுகள் வழங்கப்பட்டது.

தவில் கலைஞர் ஸ்ரீநிவாஸ் ,பம்பை, பரதநாட்டியம் கலைஞர் காவ்யா, குரலிசை கலைஞர் கே.எஸ்.தர்ஷினி ஆகியோருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் கலை இளமணி விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலைப்பண்பாட்டுத்துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் செந்தில்குமார், இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரராமன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News