பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி விசாரணை நடத்திய காட்சி.
ஏலசீட்டு நடத்தி ரூ.25 கோடி சுருட்டிய விவகாரம்: சரணடைந்தவர் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை
- கடந்த 15-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி போலீசார் தீவிர சோதனையில் இருந்தபோது ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
- சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதேப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பு குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த வி.மாதேப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் என்பவர்கள் மாத ஏல சீட்டு நடத்தி வந்தனர்.
இவர்களிடம் வேப்பனப்பள்ளி கிருஷ்ண கிரி பாகலூர்,பேரிகை,ஓசூர் மற்றும் கர்நாடக ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இவர்களிடம் பணம் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முனிரத்தினம் இருவரும் சுமார் 25 கோடி ரூபாய் பணம் மோசடி செய்து தலைமறைவாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட வர்கள் வேப்பனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து வேப்பனப்பள்ளி போலீசார் கிருஷ்ணமுர்த்தி மற்றும் முனிரத்தினம் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர இருவரையும் தேடி வந்தனர்.இதையடுத்து கடந்த 15-ம் தேதி கிருஷ்ணமூர்த்தி போலீசார் தீவிர சோதனையில் இருந்தபோது ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து விசாரணைக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு வந்தனர்.
கடந்த 10 நாட்களாக கிருஷ்ணமூர்த்தியிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தினர்.
சோதனையில் ஏலசீட்டு நடத்திய முக்கிய ஆவணங்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள், லேப்டாப் ஆகியவற்றை பொருளாதார குற்ற பிரிவு போலிசார் கைப்பற்றினர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் சோதனை பற்றி அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதேப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் மாதேப்பள்ளி கூட்டுரோடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு இருந்த வேப்பனப்பள்ளி போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.