உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்து நாசமான போலீஸ் ஏட்டுவின் கார்.

கடலூரில் பரபரப்பு: போலீஸ் ஏட்டு காருக்கு தீ வைப்பு

Update: 2022-10-07 07:15 GMT
  • ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
  • பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்:

கடலூர் செம்மண்டலம் குண்டு சாலை நடேசன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 43). கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறை ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டு முன்பு தனது காரை நிறுத்திவிட்டு குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கார் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. மேலும் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து ஏட்டு முத்துக்குமரன் வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் இவரது கார் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து முத்துக்குமரன் எரிந்து கொண்டிருந்த காரை தண்ணீர் ஊற்றி அைணத்தார். பின்னர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஏட்டு காருக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்து தப்பி ஓடினார்களா? அல்லது கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததற்கு வேறு ஏதேனும் காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மத்திய சிறைச்சாலையில் பகுதியில் உள்ள உதவி ஜெயிலர் மணிகண்டன் வீட்டிற்கு முன்விரோதம் காரணமாக சிறை சாலையில் பணிபுரிந்த போலீஸ், பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் குடும்பத்தை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் , மீண்டும் போலீசார் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த அவரது கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News