உள்ளூர் செய்திகள்

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு

Published On 2024-08-13 10:45 IST   |   Update On 2024-08-13 10:45:00 IST
  • கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஜி.எஸ்.டி. ரோட்டையும் பழைய மகாபலிபுரம் ரோட்டையும் இணைக்கும் வகையில் வண்டலூர்-கேளம்பாக்கம் மெயின் ரோடு உள்ளது.

19 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரோட்டில் பள்ளி, கல்லூரிகள் நிறைய உள்ளன. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

இந்த சாலையில் கனரக வாகனங்களும் எப்போதும் சென்று வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

வண்டலூர் சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தொடங்கும் நெரிசல் பஸ் நிலைய பகுதியிலும் நீடிக்கிறது.

ரத்தினமங்கலம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை பராமரிப்பும் சரி இல்லை. இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.

அந்த பகுதியில் குடியிருப்பவர்களும் நெரிசல் காரணமாக சாலையை கடக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக கூறுகிறார்கள்.

வார இறுதி நாட்களில் கார் மற்றும் இதர வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் நகர பகுதியில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் கேளம்பாக்கம் சாலை வழியாக வண்டலூர் வருகிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகிறார்கள்.


போக்குவரத்து நெரி சலை சமாளிக்க வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்து உள்ளார்கள்.

அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைப்பதற்காக மட்டும் அல்ல. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி குறிப்பிட்டார்.

இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலையும் சமாளிக்க முடியும் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த போக்கு வரத்து மாற்றம் அடுத்த சில மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News