உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் நகரில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

மதுராந்தகத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2023-02-04 06:49 GMT   |   Update On 2023-02-04 06:49 GMT
  • மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.
  • மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகம்:

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் மருத்துவமனை சாலை, தேரடி தெரு, பழைய போலீஸ் ஸ்டேசன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

இங்கு பத்திரப்பதிவு அலுவலகம், கிளை சிறைச்சாலை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், செய்யூர், சூனாம்பேடு, சித்தாமூர், பூதூர், வேடந்தாங்கல், பாக்கம், உள்ளிட்ட 100 மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளில் இருந்து, மதுராந்தகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடைபாதையை ஆக்கிரமித்து செயல்பட்ட கடைகளை அகற்ற மதுராந்தகம் நகராட்சி, போக்குவரத்து காவல் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினரால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் மதுராந்தகம் கோட்டாட்சியர், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாநில நெடுஞ்சாலை துறை மதுராந்தகம் உதவி கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

மதுராந்தகம் நகரில் நேற்று முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் செல்ல போக்குவரத்து காவல்துறையின் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மதுராந்தகம் நகருக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News