எதிர்ப்பை மீறி பதிவு திருமணம்: மகள் வேண்டாம் என்று பெற்றோர் கூறியதால் காதல் கணவருடன் அனுப்பி வைத்த போலீசார்
- சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆலங்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடசேரிரோடு பகுதியைச் சேர்ந்தவர் பால்சேகர் மகன் ரோஷ்னேஷ் (வயது 24). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பல்லவராயன்பத்தை ஊராட்சி கொண்டையன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகன்யா (24). பி.எஸ்சி. நர்சிங் படித்துள்ள இவரும் ரோஷ்னேசும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே சுகன்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி முடிவெடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டது. ஆனாலும் சுகன்யாவின் பெற்றோர் காதல் கணவரிடம் இருந்து பிரித்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் ரோஷ்னேஷ் ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தானும், சுகன்யாவும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், சுகன்யாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் சுகன்யாவையும், அவரது பெற்றோரையும் அழைத்து பேசி சுகன்யாவை தன்னுடன் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் அழகம்மை இருவீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுகன்யாவின் பெற்றோர் எங்களுக்கு மகள் வேண்டாம் என்று எழுதி கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து சுகன்யாவை அவரது காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஆலங்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.