சண்முகநதி பகுதியில் உள்ள கோவில் நிலம் மீட்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
பழனி கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு
- பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
- அறநிலையத்துறையினர் சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் குத்தகை முறையில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் சண்முகநதி, கோதைமங்கலம் ஆகிய பகுதியில் முருகன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
அதன்பேரில் திண்டுக்கல் அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், தாசில்தார் லட்சுமி (கோவில் நிலம்), முருகன் கோவில் உதவி ஆணையர்லட்சுமி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்றனர்.
பின்னர் நிலஅளவீடு செய்து கோவில் நிலங்களை மீட்டனர். தொடர்ந்து இது கோவிலுக்கு சொந்தமானது, யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறும்போது, மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும் என்றனர்.