உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசிய காட்சி.

சிறந்த நூல்களை வாசித்தால் மாணவர்களின் ஆளுமை அதிகரிக்கும்

Published On 2023-08-19 11:17 IST   |   Update On 2023-08-19 11:17:00 IST
  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.
  • கடந்த காலங்களில் இருந்ததை காட்டிலும் தற்போது படித்த இளைய சமுதாயத்தினருக்கு போட்டிகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் அருகே சிங்கார கோட்டை பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழர் பண்பாட்டின் பெருமையை உணர்த்தும் விதமாக, "மீண்டெழும் வரலாறு" என்னும் தலைப்பில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசியதாவது:-

கடந்த காலங்களில் இருந்ததை காட்டிலும் தற்போது படித்த இளைய சமுதாயத்தினருக்கு போட்டிகள் நிறைந்த உலகமாக இருந்து வருகிறது. எனவே படிப்புடன் பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. உயர் கல்வி பயிலவும், வேலை வாய்ப்புகளை பற்றி தெரிந்துகொள்ளவும், உயர் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றை அறிந்துகொள்ள புத்தகங்கள் வழிகாட்டியாக உள்ளன.

கல்லூரி மாணவ-மாணவிகள் சிறந்த சக்தி மிக்க செயல்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். திறமையை பல மடங்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது தொன்மையான பாரம்பரியம் தொன்மையான நாகரீகம், கலாச்சாரங்களை அறிய தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் போன்ற நூல்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. திருக்குறளில் நமக்குத் தேவையான அத்தனை விபரங்களும் உள்ளன. செழிப்பான கருத்துக்களைக் கொண்ட புத்தகம் படிப்பது நமது அறிவு மற்றும் ஆளுமையை அதிகரிக்கும்.

கல்வி பாடப்புத்தகங்களை படிப்பதோடு இருந்துவிடாமல், பொதுஅறிவு சார்ந்த புத்தகங்களை படிக்க வேண்டும். இதன்மூலம் உலகம் சார்ந்த அறிவை பெற முடியும். முன்னோர்களைப் பற்றியும், முன்னோர்கள் வரலாறு, பண்பாடு, மருத்துவம் போன்றவற்றையும் அறிந்துகொள்ளலாம்.

புத்தகங்களை வாசிப்பதனால் அதிகளவில் வார்த்தைகளையும், வாக்கிய அமைப்புகளையும் அறிந்துகொள்வதோடு, தைரியம், எதையும் எதிர்கொள்ளலாம் என்ற மன உறுதி ஏற்படும். உலகை புரிந்துகொள்ளலாம். சொந்தமாக எழுதும் ஆற்றல் வளரும் என பேசினார்.

Tags:    

Similar News