உள்ளூர் செய்திகள்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த விவசாயிகள்.

ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் - தேனி கலெக்டரிடம் மனு

Published On 2023-08-18 05:22 GMT   |   Update On 2023-08-18 05:22 GMT
  • தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
  • தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தேனி:

தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா தலைமையில் தேனி மாவட்ட தலைவர் தங்கராஜ், தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் அசோக் குமார், பெரியார்-வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சி கண்ணன் மற்றும் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்க தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழ கத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் ரத்து, விலையில்லா மின்சாரம், உழவர் சந்தை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க அரசு செய்து வருகிறது. அதேவேளையில் தென்னை விவசாயிகளின் தீராத பிரச்சனைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இதில் தமிழக மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மானிய விலையில் அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பொது மக்களின் ஆரோக்கியமும் பெருகும், விவசாயமும் மேம்படும். அதுபோல கிராம பொருளாதரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், மரம் ஏறும் தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டவும் தமிழக அரசு தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்த உரத்தின் விலை தற்போது 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் தேங்காயின் விலையோ ஒரு மடங்கு கூட உயரவில்லை. இதனால் விவசாயிகளுக்கு உரம், ஆட்கள் கூலி, பெட்ரோலிய பொருட்க ளின் விலை உயர்வு போன்றவற்றால் உற்பத்தி செலவு பெருமளவு கூடி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு கொண்டிரு க்கிறார்கள்.

இதே நிலை நீடித்தால் நாட்டில் உணவு பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. எனவே தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து ஆவண செய்யு மாறு லட்சக்கணக்கான தென்னை சாகுபடி யாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News