உள்ளூர் செய்திகள்

சென்னை வியாபாரியிடம் ரூ.12.90 லட்சம், வெள்ளி பொருட்கள் திருடிய வாலிபர் கைது

Published On 2023-10-20 15:01 IST   |   Update On 2023-10-20 15:01:00 IST
  • அரக்கோணம் ரெயில் நிலைய கேமராவில் சிக்கினார்
  • ஓடும் ரெயிலில் கைவரிசை

அரக்கோணம்:

சென்னை புரசை வாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 44). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த ஆகஸ்டு மாதம் பெங்களூரில் வெள்ளி பொருட்களை வாங்கினார்.

வெள்ளிப் பொருட்கள், பணம் திருட்டு

பின்னர் அங்கிருந்து சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது அவர் ஒரு லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.12.90 லட்சம் வைத்திருந்த தனது பையை தலை அருகில் வைத்துக்கொண்டு தூங்கினார். அப்போது பணம், நகை இருந்த பையை திருடி சென்றுவிட்டனர்.

இந்த ரெயில் மறுநாள் அதிகாலை அரக்கோணத்தைக் கடந்து பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

அப்போது சதீஷ்குமார் தூக்கத்திலிருந்து விழிந்து பார்த்த போது தான் வைத்திருந்த பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்தார்.

இது குறித்து சென்ட்ரல் ரெயில் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

தனிப்படை விசாரணை

இதனையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க ரெயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் எஸ்.பி செந்தில்குமார் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஒரு குழுவும் ரெயில்வே இருப்புப்பாதை போலீஸ் டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் ஒரு குழு என 2 குழு அமைக்கப்பட்டு திருடியவர்களை தேடி வந்தனர்.

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

இதில் சதீஷ்குமாரின் பையை மர்ம நபர் எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் அந்த திருடனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டில் ஈடுபட்டவர் அரக்கோணத்தை சேர்ந்த ஜெகன் என்பதும் , ஆகஸ்டு 30-ந் தேதி அதிகாலையில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு அந்த ெரயில் வந்த போது சதீஷ்குமார் பயணித்த பெட்டியில் ஏறி பேசின் பிரிட்ஜ் வருவதற்குள் பையை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதும் தெரியவந்தது.

உடனடியாக தனிப்படை போலீசார் ஜெகனை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் ஜெகன் வெள்ளிப் பொருள்களையும் ரூ.12.90 லடசத்தையும் அரக்கோணம் ஏ.பி.எம் சர்ச் பகுதியில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் அரக்கோணத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை மீட்டனர்.

தனிப்படை போலீசாரை ரெயில்வே உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News