உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 3-வது பெரிய ஏரி சுற்றுலா தலமாக மாற்றப்படுமா?

Published On 2023-08-07 13:19 IST   |   Update On 2023-08-07 13:19:00 IST
  • 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.
  • சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஏரியானது, தமிழகத்திலேயே 3-வது பெரிய ஏரியாக உள்ளது. இந்த ஏரி 650 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னன் 3-ம் நந்திவர்மனால் விவசாயிகள் நலன் கருதி உருவாக்கப்பட்டது.

இது சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் இந்த ஏரி 3968 ஏக்கர் பரப்பளவும்,1474 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரியின் உயரம் 30.65 அடி, கரையில் நீளம் 9 கிலோமீட்டர் ஆகும். தற்போது இந்த ஏரி பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ளது.

இந்த ஏரியின் மூலம் நேரடியாக 6200 ஏக்கர் நிலங்களும், அதன் உபரி நீரின் மூலமாக 41 ஏரிகள் நிரம்பி,10 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை முழு கொள்ளளவைவும், 4 முறை 75 சதவீத கொள்ள ளவையும் எட்டியுள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில் அடிக்கடி காவேரிப்பாக்கம் ஏரிக்கு வந்து அங்கிருந்த கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக இருந்தது.

கலை நுட்பத்துடன் கம்பீரமாக காட்சி அளித்த அந்த சுற்றுலா மாளிகை சிதலமடைந்து தற்போது சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது.

கடல் போல் காட்சி அளித்து கொண்டிருக்கும் இந்த காவேரிப்பாக்கம் ஏரியின் அழகை மேலும் அழகு படுத்தும் விதமாக ஏரியை சுற்றி பூங்கா, படகு இல்லம் போன்றவை அமைக்க வேண்டும்.

மேலும் சிதலமடைந்திருக்கும் சுற்றுலா மாளிகையை மறு சீரமைத்து சிறந்த சுற்றுலா தலமாக மாற்றட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதன் மூலம் 10 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம், ஓச்சேரி சித்தஞ்சி சிவகாளி சித்தர் பீடம் மற்றும் ரத்னகிரி பால முருகன் கோவில், வேலூர் ஜலகண்டேசுவரர் கோவில், ஸ்ரீபுரம் பொற்கோவில் ஆகியவற்றை காணவரும் சுற்றுலா பயணிகளுக்கு, காவேரிப்பாக்கம் ஏரி ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருப்பதுடன் அங்குள்ள பொதுமக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

எனவே காவேரிப்பாக்கம் ஏரியை சீரமைத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறந்த சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News