விவசாயி வீட்டில் ரூ.4.50 லட்சம் நகை திருட்டு
- வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பொன்னை ரோட்டில் சிப் காட் நெல்லிக்குப்பம் பகு தியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 59), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (48). அங்குள்ள தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு ராஜேஷ் (33), தினேஷ் (24) என 2 மகன்கள் உள்ளனர். தினேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி தனலட்சுமி, ராஜேஷ் வேலைக்கும், முனுசாமி வயலுக்கும் சென்றிருந்தனர். இதனை நோட்டமிட்ட மர்மகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த முனுசாமி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 13 பவுன் நகைகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து முனுசாமி சிப் காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.