உள்ளூர் செய்திகள்

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் ரோப்கார் விபத்து ஏற்பட்டால் மீட்பது குறித்து பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்ட காட்சி.

ரோப்கார் விபத்து ஏற்பட்டால் மீட்பது குறித்து ஒத்திகை

Published On 2023-08-17 13:41 IST   |   Update On 2023-08-17 13:41:00 IST
  • தத்ரூபமாக செய்து காட்டினர்
  • சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் நடந்தது

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையத்தில் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மலைமேல் உள்ள லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய 1,305 படிகளை கடந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.

இங்கு அமிர்த வள்ளி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மலை மீது உள்ள லட்சுமி நரசிம்மரை உள்ளூர், வெளியூர் என ஏராளமான பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், உடல் பாதிப்புள்ளவர்கள் படிக்கட்டு வழியாக சென்று லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்வது கடினமானது. இவர்களை டோலி தொழிலாளர்கள் கட்டணம் பெற்று சுமந்து செல்கின்றனர்.

இதுபோன்ற வயதானவர்கள் உட்பட படிக்கட்டுகளை ஏற முடியாத பக்தர்களுக்கு என 'ரோப் கார்' வசதி அமைக்க வேண்டுமென பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 'ரோப் கார்' அமைக்கும் பணிகள் முழுமை அடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றி கரமாக முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிலுக்கு 'ரோப் கார்' மூலமாக பயணிக்க வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறை, மலை உச்சியில் 15 படிக்கட்டுகளை கடக்க லிப்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்த பணிகள் முழுமையடைந்து எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பக்தர்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி மலைகோவிலுக்கு செல்லும் ரோப் காரில் பயணிக்கும் போது ஏற்படும் அவசரகால விபத்துக்களை எதிர்கொள்ளும் பொருட்டு மீட்பு ஒத்திகை பணி இன்று காலை அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலம் நடைபெற்றது. ரோப்காரில் பக்தர்கள் விபத்தில் சிக்கினால் எப்படி மீட்பது என தத்ரூபமாக செய்து காட்டினர்.

இந்நிகழ்வில் சோளிங்கர் தீயணைப்பு துறையினர், சோளிங்கர் வட்டாட்சியர், சோளிங்கர் உள்வட்ட வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் இந்து சமய அறநிலைய துறையினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News