உள்ளூர் செய்திகள்

நகராட்சி சாதாரண கூட்டம்

Published On 2023-10-01 08:41 GMT   |   Update On 2023-10-01 08:41 GMT
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
  • கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுவதாக புகார்

ராணிப்பேட்டை:

வாலாஜா நகராட்சி சாதாரண கூட்டம் நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை தலைமையில் நடைபெற்றது. நகரமன்ற துணை தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் நகராட்சி வளாகத்தில் உள்ள பழைய கழிப்பிடங்களை இடித்து அப்புறபடுத்திவிட்டு புதியதாக கழிப்பிடங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பேசியதாவது:-

வார்டுகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு வாலாஜா நகராட்சிகுட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு மருந்து புகை அடிக்க வேண்டும், கால்வாய்களை தூர்வார வேண்டும். நகராட்சி மார்கெட் பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அப்பள்ளியின் வெளியே கால்வாய் தூர்வாராமல் தூர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் இதனால் அவதிக்குள்ளாகின்றனர். இதனை தூர்வார வேண்டும்.

மழைக்காலத்திற்குள் நிலுவையில் உள்ள சாலைகளை விரைந்து போட நடவடிக்கை எடுக்க வேண்டும். வாலாஜா நகரத்தில் சாலைகளிலும், தெருக்களிலும் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அவைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதில் அளித்து நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை பேசியதாவது:-

மோட்டார் சரி செய்யப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் குடிநீர் பிரச்சினை இருக்காது. கொசு புகை மருந்து அடிக்கும் மெஷின் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் கொசு புகை மருந்து அடிக்கப்படும். நகராட்சி பகுதியில் 5 சாலை பணிகள் தான் நிலுவையில் உள்ளது.

இதனையும் விரைந்து முடிக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News