உள்ளூர் செய்திகள்

அம்மூரில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி

Published On 2023-07-11 08:14 GMT   |   Update On 2023-07-11 08:14 GMT
  • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
  • ரூ.30 கோடியில் அமைகிறது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் ரூ.30 கோடியே 23 லட்சம் மதிப்பில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளாக பொன்னை ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள், தரைத்தள மற்றும் மேநீர் தேக்கத் தொட்டிகள், பிரதான குடிநீர் மற்றும் விநியோக பைப் லைன் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் சங்கீதா மகேஷ், துணைத் தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அம்சா, வாலாஜா ஒன்றியக்குழுத் தலைவர் வெங்கட்ரமணன், செயல் அலுவலர் கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இப்பணிகள் ஓராண்டு காலத்திற்குள் முடிக்கப்படும்.

இதனால் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் 14 ஆயிரத்து 505 பேர் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News