உள்ளூர் செய்திகள்

வங்கிகள் விவசாயிகளை அலைக்கழிக்கிறது

Published On 2023-01-25 15:06 IST   |   Update On 2023-01-25 15:06:00 IST
  • குறைதீர்வு கூட்டத்தில் குற்றச்சாட்டு
  • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தகவல்

அரக்கோணம்:

அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் விசாயிகள் மாதந்திர குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நெமிலி, அரக்கோணம் மற்றும் சோளிங்கர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் திரளாக கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது:-

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாகவும், வாடிக்கையாளர்களையும், விவசாயிகளையும் அலை கழிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நெமிலி வட்டம் கரியாக்குடல் பகுதியில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பயிர்களை நள்ளிரவில் மான்கள் மேய்ந்து சேதப்படுத்துவதாகவும், மேலும் பல ஏக்கரில் பயிரி டப்பட்டுள்ள கேழ்வரகு, வெண்டை மற்றும் சிறுதானிய பயிர்களை மான்கள், காட்டுபன்றிகள், முள்ளம்பன்றிகள் சேதப்படுத்துவதாகவும் அவற்றை நள்ளிரவில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கட்டுபடுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகள் விவசாயிகளை வாரந்தோறும் சந்தித்து என்ன பயிர்களை பயிரிட வேண்டும், பூச்சி தாக்குதலுக்கு என்ன மருந்து தெளிக்க வேண்டுமென ஆலோசனை வழங்க கிராமங்களுக்கு யாரும் வருவதில்லையெனவும் குற்றஞ்சாட்டினர்.

காப்பீட்டு நிறுவ னங்களுக்கு பயிர்களுக்கான உரிய காப்பீட்டு தொகை செலுத்தியும் பயிர்கள் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் புதிய சாலை மற்றும் சாலை விரிவாக்க பணிகளுக்கு ஏரிகள் மற்றும் குளங்களில் அளவிற்கு அதிகமான மண் எடுக்கப்படுவதாகவும் அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதாகவும் அதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் ஏலியம்மா ஆபிரகாம், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மை அலுவலர் அசோக் ஆகியோர் உடன் இருந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசிலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் பாத்திமா தெரிவித்தார்.

Tags:    

Similar News