பழைய அழகு சாதன பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிய வாலிபருக்கு அடி-உதை
- புதியதாக மாற்றி தருவதாக மோசடி
- பொதுமக்கள் மன்னிப்பு வழங்கி விடுவித்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் டவுனில் கடந்த சில மாதங்களாக வாலிபர் ஒருவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்று அங்குள்ள காலாவதியான அழகு சாதன பொருட்களை பெற்றுக்கொண்டு புதியதாக மாற்றி தருவதாக ஏமாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று அரக்கோணத்தில் மொத்த அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் குடோனுக்கு சென்ற வாலிபர், அங்கிருந்த பெண்ணிடம் பழைய அழகு சாதன பொருட்களை கொடுத்தால் புதிய பொருட்கள் கொடுப்பதாக தெரிவித்தார்.
இதை உண்மை என நம்பிய பெண் பழைய அழகு சாதனப் பொருட்களை சேகரித்து தனது மேஜையில் வைத்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த பையில் அழகு சாதனை பொருட்களை நிரப்பி எடுத்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனைக் கண்டு திடுக்கிட்ட பெண்மணி அவரை பைக்கில் துரத்தி சென்று மடக்கி பிடித்து கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து வாலிபர் பொதுமக்கள் காலில் விழுந்து இனி திருந்தி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என கெஞ்சினார்.
பொதுமக்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை கடையில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்து வந்ததாகவும், மதுவுக்கு அடிமையானதால் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதால் இதுபோன்ற நூதன மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து வாலிபரை போலீசில் ஒப்படைக்காமல் பொதுமக்கள் மன்னிப்பு வழங்கி விடுவித்தனர்.