உள்ளூர் செய்திகள்

எஸ். புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வந்த டவுன் பஸ்சை கிராம மக்கள் வரவேற்றனர்.

கூடுதல் நேரங்களில் டவுன் பஸ்கள் இயக்கம்

Published On 2022-10-18 06:59 GMT   |   Update On 2022-10-18 06:59 GMT
  • கடலாடி அருகே உள்ள புதுக்குடியிருப்பு கிராமத்துக்கு கூடுதல் டவுன் பஸ்கள் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் மேலச் செல்வனூர் ஊராட்சி எம்.எஸ். புதுக்குடியிருப்பு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய குடித்த தொழிலாளர்கள் உள்ளனர். கிராம மக்கள் வெளியூர்களுக்கு செல்ல வேண்டுமானால் கடலாடி- முதுகுளத்தூர் சாலைக்கு வரவேண்டும். அதுவும் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இந்த கிராமத்திற்காக முதுகுளத்தூர் பணிமனை யில் இருந்து டவுன் பஸ் முதுகுளத்தூர், ஒருவா னேந்தல், ஆப்பனூர், புனவாசல், மாரந்தை, ஓரிவயல், ஆலங்குளம், வழியாக எம்.எஸ் புது க்குடியிருப்பு கிராமத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 8.45-க்கும் 2 முறை சென்று வந்தது. பொதுமக்களின் தேவைக்கு கூடுதல் சேவை இயக்க கேட்டு முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சட்டமன்ற அலுவலர்கள் கிராம மக்களின் கோரிக்கையை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தெரிவித்தனர். கிராம மக்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து கிராமத்திற்கு கூடுதல் நேரத்தில் டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டார்.

அதன்படி நாள் ஒன்றுக்கு கூடுதலாக காலை 11.45 மணிக்கும், மாலை 3 மணிக்கும் 2 முறை கிராமத்திற்கு பஸ் வர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். நேற்று கிராமத்திற்கு வந்த டவுன் பஸ்சை கிராம மக்கள் மாலை அணிவித்தும், டிரைவர்- கண்டக்டருக்கு சால்வை அணிவித்தும், பஸ்சுக்கு சூடம் காண்பித்தும் வரவேற்பு அளித்தனர்.

மனு கொடுத்த மறுகணமே கிராமத்திற்கு கூடுதல் பஸ் விட நடவடிக்கை எடுத்த அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலாடி தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகவேல், சட்டமன்ற அலுவலர்கள் சத்தியேந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன், முதுகுளத்தூர் பணிமனை மேலாளர் அறிவரசன், தொழிற்சங்க காரைக்குடி மண்டல இணை பொது செயலாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News