உள்ளூர் செய்திகள்

கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினருக்கு கொலை மிரட்டல்

Published On 2022-07-20 13:47 IST   |   Update On 2022-07-20 13:47:00 IST
  • கடல் அட்டை கடத்தலை தடுக்க முயன்ற வனத்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மற்றும் வேதாளை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத் துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் மண்டபம் வனத்துறை வனவா் அருண்பிரகாஷ், வேட்டைத்தடுப்பு காவலா்கள் நேரு, கண்ணன், சிவசண்முகம், ராஜேஷ் ஆகியோர் மரைக்காயா்பட்டணம்- வேதாளை சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கடல் அட்டைகள் இருந்தது தெரிய வந்தது. அந்த வாகனம் வேதாளையை சோ்ந்த முகமது அலி ஜின்னா (வயது47) என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த முகமது அலி ஜின்னாவின் தம்பி சாதிக்அலியை வனத் துறையினா் கைது செய்ய முயன்றனா். அதற்கு அவர் ஒத்துழைப்பு அளிக்க வில்லை. மேலும் அவர் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு கும்பலை அங்கு வரவழைத்தாா். அங்கு வந்த 20 போ் கும்பல் வனத்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து வனவர் அருண்பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் சாதிக்அலி, அவரது அண்ணன் முகமது அலி ஜின்னா மற்றும் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News