உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்தது. 

தகுதியான மீனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை

Published On 2023-06-10 08:35 GMT   |   Update On 2023-06-10 08:35 GMT
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான மீனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதியளித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மீனவர்களிடம் இருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்பின் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசியதாவது:-

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் சென்று வருவதுடன், உரிய எல்லை பகுதிக்குள் சென்று வர வேண்டும். அதேபோல் மீன்கள் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை அழைத்துப்பேசி மீனவர்களுக்கு தங்கள் பொருளுக்குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா தகுதியுடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட் டுள்ளதை மீனவர்கள் கொண்டு வருவதற்கு ஏதுவாக தேவையான உதவிகளை மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

கடற்கரை ஓரமுள்ள மீன் இறங்குதளம் அருகில் பயன்பாடற்ற தூண்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களை கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியின்றி இறால் பண்ணை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீலப்புரட்சி திட்டத்தில் வீடு கட்ட ஆணை பெற்று வீடு கட்டாதவர்கள் உடனடியாக கட்டுமான பணியினை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல்காதர், ஜெய்லானி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News