கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா
- கந்தர்வகோட்டை ஆபத் சகாயேஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது
- விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் திருக்கோவிலில் திருவாசகம் முற்றோதல், முதலாம் ஆண்டு நிறைவு விழா, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனி திருவீதி உலா மற்றும் திருமுறைகள் திருவீதி உலா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.விழாவை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
கோவில் கிழக்கு கோபுரத்திலிருந்து நால்வர் திருமேனிகள் மற்றும் திருமறைகள் அடங்கிய பெட்டிகளை சிவன் அடியார்கள் தங்களின் சிரமேல் வைத்து பக்தி பெருக்குடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கைலாய வாத்தியம் முழங்க திரு வீதிஉலா நடைபெற்றது.திருவீதி உலாவின் போது சிவன் அடியார்களுக்கும், பக்தர்களுக்கும் ஆங்காங்கே பொதுமக்கள் நீர்மோர், இளநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் சென்னை, பட்டுக்கோட்டை, திருச்சி, கந்தர்வகோட்டை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை சிவனடியார்கள், பக்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.