அமைச்சர் பட்டியலின மக்களை புண்படுத்திவிட்டார் - அம்பேத்கார் மக்கள் இயக்கம் கண்டனம்
புதுக்கோட்டை:
அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த மணம்பூண்டியில் நியாய விலை கட்டடத் திறப்பு விழாவில், திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், அதே மேடையில் அமர்ந்திருந்த பெண் ஒன்றிய குழு தலைவரை பார்த்து, சாதியை குறிப்பிட்டு அந்த ஒன்றிய குழு பெண் தலைவரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாதிய வன்கொடுமை செய்துள்ளார். இந்திய தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும்,
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவரை ஜாதியை சொல்லி களங்கப்படுத்துவது சட்ட சாசனத்திற்கு எதிரான செயலாகும். இந்திய இறையாண்மையை காப்பற்றுவேன் என்று உறுதிமொழி ஏற்று அமைச்சரான ஒருவர் இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் குலைக்கும் வகையில் பேசியது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பங்கு வகிக்கும் பட்டியலின மக்களின் உணர்வுகளை அமைச்சர் பொன்முடி புண்படுத்திவிட்டார். இச்செயலுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில், அம்பேத்கர் மக்கள் இயக்கம் தமிழகம் தழுவிய போராட்டத்தை கையிலெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.