காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை
- காதல் திருமணம் செய்து கொண்ட புதுக்கோட்டையை சேர்ந்த, புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- புதுக்கோட்டையில் உள்ள தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் துயர முடிவு
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவரது மகள் விஜயலட்சுமி (வயது 20). இவருக்கும் மணப்பாறை புதுமணியாரம் பட்டி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு விஜயலட்சுமி பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.பின்னர் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறிய விஜயலட்சுமி கடந்த மாதம் 2-ம் தேதி அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் முன்னிலையில் காதலனை திருமணம் செய்தார். அதன் பின்னர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கணவர் வீட்டில் குடும்பம் நடத்தினார்.இந்த நிலையில் அவருக்கு தாயாரை பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. ஆனால் காதல் திருமண தகராறு காரணமாக பெற்றோர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. இதனால் மனக்குழப்பத்துக்கு ஆளான விஜயலட்சுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருந்த போதிலும் விஜயலட்சுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விஜயலட்சுமியின் தாயார் அமுத ராணி வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.காதல் திருமணம் செய்த இளம் பெண் தாயை பார்க்க முடியாத ஏக்கத்தில் ஒரே மாதத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.