கறம்பக்குடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம்
- மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு கறம்பக்குடியில் குதிரை, மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது
- ஆண்கள்,பெண்களுக்கு நடத்தப்பட்ட ஓட்டப் பந்தயத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய ஒருமைப்பாட்டு கலை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி குதிரை வண்டி எல்கை பந்தயம் மற்றும் ஆண்கள் பெண்கள் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.முன்னதாக காலையில் நடைபெற்ற பெரிய மாடு கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை, பெரிய குதிரை ஆகியவற்றின் பந்தயத்தை புதுக்கோட்டை இளைய மன்னரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான விஜய ரகுநாத கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கரிச்சான் மாடு கரிச்சான் குதிரை பந்தயம் 10 மையில் தூரம் சென்று திரும்பும் வகையில் நடைபெற்றது. போட்டியில் தஞ்சாவூர், மதுரை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் கலந்து கொண்டு மாடு குதிரை வண்டிகளை ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரை பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் கரிச்சான் ஒற்றை மாடு, நடு மாடு, பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாடு மற்றும் குதிரை வண்டிகள் பங்கேற்றன. தொடர்ந்து ஆண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. வயது வித்தியாசம் இன்றி நடத்தப்பட்ட இந்த போட்டியில் 66 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை யடுத்து பெண்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் வீராங்கனைகள் கலந்து கொண்டு 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூபாய் 5 ஆயிரம் , ரூபாய் 4 ஆயிரம், ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்பட்டது. அனைத்து போட்டிகளும் முதல் நான்கு இடங்களை பெற்றவர்களுக்கு வெள்ளி மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிலா விடுதி ஊராட்சி மன்ற தலைவர் விஜய ரவி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் பண்ண வயல் ராஜா தம்பி, ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரை, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சிவ திருமேன நாதன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானசேகரன் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.